இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவர் என சட்டத்தரணி சானக அபயவிக்ரம தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் தேசபந்து தென்னகோன் கடந்த 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதன்பின் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் வழக்கறிஞர் சானக அபயவிக்ரம கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவர்.
அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் அது நடந்திருக்கலாம்.
மற்ற கைதிகளைப் போலவே குறைந்தபட்ச வசதிகள் சிறைக்குள் தேசபந்துவுக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.
மேலும், சிமெண்ட் தரையில் தூங்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பாய் அல்லது மெத்தை பெற முடியும் என்றும் சானக அபயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னால் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அங்குனகொலபலாஸ்ஸ சிறையில் கழித்த முதல் நாளில் உணவு சாப்பிட மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்றும், மேலும் யாருடனும் பேசவில்லை என்றும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் விளக்கமறியலில் தேசபந்து தென்னகோன்,
தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு அனுமதிக்குமாறு தும்பர சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குறித்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் வெளியே இருந்து உணவை பெற கோரிக்கைகளை முன்வைக்கலாம்.
கோரிக்கையை சம்பந்தப்பட்ட சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி, தேசபந்து தென்னகோனும் இதேபோன்ற கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.