எச்சரிக்கை..! மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கும் வெப்பநிலை


வெப்பமான வானிலையானது இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
 
நிலவும் வெப்பமான வானிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
 
இதேவேளை, தற்போது நிலவும் வெப்பமான வானிலையைக் கருத்திற் கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதிக வெப்பநிலைக்கு உள்ளாகும் வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்குமாறும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது வெப்பநிலையைக் கருத்திற் கொள்ளுமாறும் அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேநேரம் 24 ஆம் திகதி முதல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.