ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட சிறந்த தரத்திலான மோட்டார் வாகனத்தை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். இதற்கமைய வரி நீங்கலாக சுசுகி வெகன் ஆர் ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி முதல் முதற்கட்டமாக பஸ், வேன், டபள் கெப் மற்றும் லொறி ஆகிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த வர்த்தமானிக்கு அமைய சாதாரண மக்கள் தனிப்பட்ட பாவனைக்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் மோட்டார் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்படுமாயின் ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட சிறந்த தரத்திலான வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க குறிப்பிடுகையில் ,
வாகன இறக்குமதிக்கு அனுமதியளித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இரண்டாம் கட்டமாக கார், வேன் போன்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜப்பான் நாட்டில் 5 முதல் 7 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். புதிய வாகனங்களை இறக்குமதி செய்தாலும், பழைய வாகனங்களை இறக்குமதி செய்தாலும் தற்போது உள்ள புதிய ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டத்துக்கு அமைய கட்டணம் ஒன்றாக காணப்படுகிறது.
ஆகவே அதிக செலவு செய்து புதிய வாகனத்தை இறக்குமதி செய்வதை காட்டிலும் பயன்படுத்தப்பட்டு சிறந்த தரத்தில் உள்ள வாகனங்களை இறக்குமதி செய்வது அரசுக்கும், நுகர்வோருக்கும் பயனுடையதாக அமையும்.
இதற்கமைவாக டொயோடா கொரோலா ரக வாகனத்தை வரி இல்லாமல் 55-60 இலட்சம் ரூபா விலைக்கும், ஹொன்டா வெசல் ரக வாகனத்தை 60-65 இலட்சம் ரூபா விலைக்கும், டொயோட்டா யாரீஸ் ரக வாகனத்தை 27-30 இலட்சம் ரூபா விலைக்கும் இறக்குமதி செய்ய முடியும்.
அதேபோல் டொயோட்டா யாரீஸ் குரோஸ் ரக வாகனத்தை 55 இலட்சம் ரூபா விலைக்கும், சுசிகி வெகனார் ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபா விலைக்கும் இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமுதியாளர் இறக்குமதியாளர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜகத் ராமநாயக்க தெரிவித்தார்.