தொடரும் விசா சர்ச்சை: பதவி விலகப் போவதாக எச்சரிக்கும் அமைச்சர்!

தனது அமைச்சு பதவியிலிருந்து விலகப்போவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) எச்சரித்துள்ளார். 

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையில் இன்று (6) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த எச்சரிக்கையை அவர் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் (Sri Lanka) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விசா நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக தான் பதவி விலகப் போவதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். 

தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசா நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

வி.எப்.எஸ் நிறுவனத்தால் (VFS Global) அறவிடப்படும் சேவைக்கட்டணம் தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

இதனை தொடர்ந்து, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து 30 நாட்களுக்கு 50 டொலர் விசாவை சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய நடைமுறைக்கு வி.எப்.எஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.