ஒக்டோபர் முதல் மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதி!



304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும்.

இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்ய 2020 மார்ச் மாதத்தில் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடை மூலம், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நிர்வகிப்பதற்காக இவ்வாறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் மூன்று கட்டங்களில் செய்யப்படும்.

முதலாவது கட்டம் : பொதுப் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்களின் இறக்குமதிக்கு 2024 ஒக்டோபர் 01 முதல் அனுமதி வழங்கப்படும்.

இரண்டாம் கட்டமாக வணிக அல்லது சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதிக்கு 2024 டிசம்பர் 01 முதல் அனுமதி வழங்கப்படும்.

மூன்றாவது கட்டமாக  கார்கள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் போன்றவை உட்பட தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்கள்  இறக்குமதிக்கு 2025 பெப்ரவரி 01 முதல் அனுமதி வழங்கப்படும்.

விதிக்கப்பட்ட தடையை படிப்படியாக நீக்குவது மூலம், இந்நாட்டின் வாகன தொழில்துறைக்கு புத்துயிர் அளிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க எதிர்பார்க்கப்படுவதோடு, பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயற்திறனின்மையைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது