வெடுக்குநாறிமலை விவகாரம் : பாராளுமன்றில் ஆர்ப்பாட்டம் Video



வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றையதினம் (19.03.2024) இடம்பெற்ற சபை அமர்வின்போதே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலிஸாரின் அராஜகத்தை நிறுத்தகோரியும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கும் நீதி கிடைக்க வலியுறுத்தியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் போராட்டத்தில் கலந்துகொண்டு வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நீதி அமைச்சர் அளித்ததையடுத்து போராட்டம் முற்றுப்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
வொயிஸ்
இந்நாட்டில் மத சுதந்திரம் என்பது தெற்கில் உள்ளதைப் போலவே வடக்கில் உள்ள மக்களுக்கும் அதே உரிமை உண்டு.

இனம், மதம், சாதி பேதங்கள் கடந்து சகலருக்கும் மதம் மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. இது ஒருவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளாகும்.

விகாரையாக இருந்தாலும், பள்ளிவாசலாக  இருந்தாலும், கோவிலாக இருந்தாலும், எந்த மத வழிபாட்டு இடங்களிலும் சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள உரிமை உள்ளது.

இந்த மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்விவகாரம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட எண்மரும் இன்றைய தினம் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நாளைய தினம் நடைபெறவிருந்த ஜனாதிபதியுடனான சந்திப்பை இரத்துச்செய்துள்ளனர்.