அரச தலைவர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றவர்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆகவே உடனடியாக இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சாட்சியங்கள் அழிக்கப்படும் முன்னர் சாட்சியங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் உத்தரவை வழங்கியுள்ளார்.
கொழும்பு பிரதி காவல்துறைமா அதிபர் சந்திரகுமார மற்றும் மேல் மாகாண குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் ரோஹான் பிரேமரத்ன ஆகியோருக்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் அரச தலைவர் மாளிகை, அலரி மாளிகை மற்று அரச தலைவர் செயலகத்திற்குள் சென்றவர்கள், அவற்றுக்குள் எடுத்த காணொளிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            