இலங்கையில் பூதாகரமாகியுள்ள USAID இன் நிதியுதவி : அரசாங்கம் தீவிர விசாரணை


இலங்கையில் USAID இன் நிதியுதவி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், அது தொடர்பாக தேசிய அரச சார்பற்ற நிறுவன செயலகத்திடம், அரசாங்கம் அறிக்கை கோரியுள்ளது.

இதன்படி, இலங்கையில் USAID நிதியுதவி தொடர்பான குற்றச்சாட்டுகளை முழுமையாகக் கையாள்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.

அதற்காகவே ,தனது அமைச்சின் கீழ் இயங்கும் அரச சார்பற்ற நிறுவன செயலகத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம்,  USAID மூலம் வழங்கப்படும் வெளிநாட்டு உதவியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

 
கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 40 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு உதவிகளுக்கு செலவிடுகிறது.

இது பல அமெரிக்க மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும், இந்த நிலையில், நிதியை முடக்கும் முடிவைத் தொடர்ந்து, இலங்கையில் அரச சார்பற்ற நிறுவன செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த 21 பில்லியன் ருபாய் மதிப்புள்ள திட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

இருப்பினும், அரச சார்பற்ற நிறுவன செயலகத்திற்கு வெளியே செயல்படும் NGOக்கள் மூலம் செலவிடப்பட்ட பணம் குறித்து அதிகார பூர்வ அறிக்கை எதுவும் இல்லை.

 செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட 625 செயலில் உள்ள NGOக்கள் உள்ளன. தவிர, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஏராளமான NGOக்கள் உள்ளன.

 
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் உர நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்க அரசாங்கம் USAID மூலம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது.

பொருளாதார நெருக்கடியின் போது அது மனிதாபிமான உதவிகளையும் வழங்கியது. இருப்பினும், ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விரட்டியடித்தல் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களுக்காகவும், USAID நிதிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தபட்டுள்ளன.