ஆசியாவின் நம்பகமான நண்பன் சீனா : சரத் வீரசேகர தெரிவிப்பு

ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பன் சீனா என அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற BOAO உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டிருந்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஆசிய நாடுகளுக்கு இடையேயான பிணைப்பை மேற்கத்திய உலகம் ஒருபோதும் புரிந்து கொள்ளாது என்றார்.

மேலும், சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பராக இருந்து வருகிறது, இது வர்த்தகம் மற்றும் முக்கியமாக பௌத்தம் மூலம் பரிணமித்து வளர்க்கப்படுகிறது.

பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடாக இருக்கும் சீனா, மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நாட்டில் ஒரு பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்தபோது மேற்கத்திய நாடுகளால் இழிவுபடுத்தப்பட்டோம், ஆனால் அந்த வேளையிலும் சீனா எங்களுக்கு ஆதரவாக நின்றது, இன்றுவரை ஆதரவளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.  

அண்மையில், நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்காக அமெரிக்கா செல்வதற்கு வீரசேகரவுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் வீரசேகரவே தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் உள்ளார்.