நாளையுடன் நிறைவடையும் மலையக எழுச்சிப் பயணம் : பொதுமக்களுக்கு விசேட அழைப்பு


மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக்கப்பட்டது.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதாடு  தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஆதரவு வழங்கியிருந்தார்.

மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் வேர்களை மீட்டு உரிமை வென்றிட என்ற தொனிப்பொருளில், மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி, கடந்த ஜூலை 28ஆம் மன்னாரில் ஆரம்பமானது.

இந்த நடைபயணத்தில் இதுவரை பலரும் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்து வருவதோடு, இதற்கு ஆதரவினை வெளியிடும் வகையில் பல பிரதேசங்களில் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

16 நாட்கள் தொடர்ச்சியாக இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இறுதி நாளான நாளைய தினம் நாலாந்தாவில் இருந்து மாத்தளை வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மலையகம் 200 எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளை சிறி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் பங்குபெறுமாறு அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செங்கன் தேவதாஸன் கேட்டுக்கெண்டுள்ளார்.

இதேநேரம் மலையக எழுச்சி நடைபயணத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒபோகடவும் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் நடைபயணத்தை முழுமனதாக ஆதரிப்பதாகவும், மலையக தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்து, மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகட வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ” மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளனர். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் அமைதி நிலவ பங்களிப்பு செய்தனர். 200 வருடங்கள் பெரும் பாடு பட்டுள்ளனர்.

எனவே, அவர்களைத் தொடர்ந்தும் தனிமைப்படுத்த முடியாது. தேசிய இனமாக தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சவால் மிகுந்தது எனினும், இதனை செய்ய வேண்டும்.” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மலையக எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.