இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayaka) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று (22) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வாக்களிக்கும் உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்திய இலங்கை மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். 

இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக அமைப்பின் பலம், அமைதி மற்றும் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் குடிமக்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

ஒரு நிலையான, வளமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்.

ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசிய இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் அடிப்படையிலான எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து செயற்பட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

நமது நாடுகளுக்கு இடையே பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.