இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், இன்றிரவு (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) நாட்டிலிருந்து சென்றுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டிலிருந்து சென்ற இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ரோஹன் ஓலுகல மற்றும் மஹிந்த ஜயசுந்தர ஆகியோர் இந்தோனேசிய பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணதுறை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
அந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை பின்னர் விடுவிக்கப்பட்டதுடன், அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது.
அதன்படி, நேற்று மாலை நாடு திரும்பிய பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, ஆரம்பகட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் குறித்த பெண்ணும் அவரது குழந்தையும் நேற்று இரவு சுமார் 10.00 மணியளவில் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கடத்தல்காரர்கள் பற்றிய மேலதிக தகவல்களைக் அறிவதற்காக தற்போது அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு குறித்த பெண் டுபாய் சென்றிருந்ததாக விசாரணைகளின் போது அவர் கூறியுள்ளார்.
அவர் சிறிது காலம் அங்கு தங்கியிருந்ததாகவும், பின்னர் கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவுக்கு சென்றதாகவும் கூறியிருந்தார்.