காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகரே பலியானார்.
இந்தக் கொலையை செய்வதற்காக 3 பேர் பிரவேசித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சேவையிலிருந்து விலகியிருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (13) இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் சிகிச்சைக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உடுகம்பொல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரொருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் உள்ளிட்ட மூன்று விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.