வாகனத்தில் பயணம் செய்த இருவர் திடீர் மரணம் - மன்னாரில் சம்பவம் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்


மன்னாரில் நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த இருவரும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ள நிலையில் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது. 

கடந்த 30ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த போது அதில் இருவருக்கு மன்னார் - உயிலங்குளம் பகுதியில் வைத்து திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது 26) மற்றும் காட்டாஸ்பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு சடலங்களும் மன்னார் வைத்தியசாலையில் இருந்து நேற்று பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.