நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 ஆயிரத்து 325 குடும்பங்களைச் சேர்ந்து 67 ஆயரத்து 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் தொடரும் சீரற்ற காலநிலையால் 2 பேர் மரணமடைந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்..
வெள்ளம், மற்றும் மண்சரிவு காரணமாக 410 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.
இதேநேரம் கொழும்பில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக கொழும்பு நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறிந்து வீழ்ந்த மரங்களில் அபாயகரமானதாக இனங்காணப்பட்ட மரங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நாட்டை ஊடறுத்து தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருகின்றமையால் நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடமாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலையால் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(22) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, பதுளை, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் அறிவித்துள்ளது.