இஸ்ரேல்-பாலஸ்தீன போர்: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களாக உயரலாம், இதன் காரணமாக மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க தெரிவித்தார்.

ஏற்கனவே யுத்தம் காரணமாக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஐந்து டொலர்கள் அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் 100 டொலர்களாக உள்ளதால், எதிர்வரும் சில மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பணவீக்கம் மீண்டும் உயரக்கூடும் எனவும், கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனால் மேலும் மேலும் துன்பப்பட நேரிடும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் 20,000 பேர் மீண்டும் இந்நாட்டிற்கு திரும்பினால் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை இழப்பது பெரும் பிரச்சினையாகி அந்த மக்கள் வேலையற்றவர்களாக மாறுவார்கள் என்றார்.

இஸ்ரேல் மட்டுமன்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவடையும் எனவும் இதன் காரணமாக வெளிநாட்டு பணவரவுகள் குறையும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக உலக சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிக்கான தேவை குறையலாம் எனவே எதிர்காலத்தில் ஏற்றுமதி வருமானம் குறையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்த சூழ்நிலை காரணமாக முஸ்லிம் உலகிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான பழைய அறப்போர் செயற்படுத்தப்படுமாயின் அது உலகில் உள்ள சுற்றுலாத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

இது முழு உலகத்தையும் பாதிக்கும் ஒரு நெருக்கடி என்பதால், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கலாம் என்றார்.

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்திற்கு மேற்கத்திய நாடுகளின் உதவிகளை இஸ்ரேல் தற்போது பெற்று வருவதாகவும் எதிர்காலத்தில் உக்ரைன் ரஷ்யா யுத்தம் இந்த போக்கோடு முடிவுக்கு வந்தால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் இருந்து இந்த நாடு ஓரளவு நிம்மதியை எதிர்பார்க்கலாம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.