இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : ஆப்கான் அணி அபார வெற்றிஇருபதுக்கு - 20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற உகாண்டா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ் 76 ஓட்டங்களையும் சத்ரன் 70 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபசல்ஹக் பாரூக்கி 9 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இதேவேளை இந்த கிரிக்கட் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.

இதில் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் 78 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.