இலங்கை முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிக்கப்பட்ட படையினர்!

நாடு முழுவதும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்திற்கும் இரண்டு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன(Nilantha Premaratna) தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக அரசாங்கத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நேற்று முன்தினம் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் நெருக்கடிகளாலும் மோதல்களாலும் இவ்வாறு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக நிலந்த பிரேமரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இராணுவம் எரிபொருள் விநியோகத்தை மட்டும் கண்காணிக்கும் என்றும் விநியோகத்திற்கு உதவிபுரிய மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.