கொழும்பை அச்சுறுத்தும் முதலைகளைப் பிடிக்க கடற்கரைகளைச் சுற்றி பொறிகள்!

 

தெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தெஹிவளை கடற்கரையில் நபர் தாக்கி கொன்ற முதலையைப் பிடிக்கவே வனவிலங்கு அதிகாரிகள் காலி முகத்திடல் கடற்கரையில் கூண்டு வைத்து வருகின்றனர் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 3ஆம் திகதி தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதனையடுத்து, கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

அதன்பின்னர், 14 அடி நீளமுள்ள குறித்த முதலை, வெள்ளவத்தையில் உள்ள கால்வாய் மற்றும்  காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் காணப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன் முதலையை உடனடியாக கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.