கோர விபத்தில் 21 மாணவர்கள் படுகாயம்

நாரம்மலவிலிருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்தின் மீது பின்னால் வந்த இன்னொரு பேருந்து மோதியதில் 21 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(15) பாதுக்கயில் துன்னான பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.

ஹோமாகம பிடிபன நெனோ தொழிநுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நாரம்மல மயூரபாத மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றிச் சென்ற 6 பேருந்துகளில் ஒரு பேருந்து பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில் பின்னால் வந்த பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த 18 மாணவர்கள் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் பாதுக்க பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.