வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 01 முதல் வரி அடையாள எண்ணை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதுள்ள அரச நிறுவனங்கள் மூலம் மக்களின் வரி பதிவு எண்ணை (TIN) பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த நிறுவனங்களிடம் இருந்து மக்களின் வரிப் பதிவு தொடர்பான தகவல்களை பெற்று அவற்றைப் பதிவு செய்ததன் பின்னர் இலக்கம் ஒன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

சட்ட சிக்கல்கள் இல்லாத நிறுவனங்களில் இருந்து இந்த தகவல்கள் பெறப்படும் என்பதுடன் வரி பதிவு எண்ணை ஒன்லைனில் பெறுவதை எளிதாக்குவதே இதன் நோக்கம்.

மேலும், வரி அடையாள எண் வைத்திருத்தால் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.2 மில்லியனுக்கு மேல் வருட வருமானம் பெறுவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டிய தேவையுள்ளது.

பெப்ரவரி 01 முதல் நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, கட்டிடத் திட்ட அனுமதி கோரும்போது, மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்யும்போது, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, நிலத்தின் உரிமையைப் பதிவுசெய்யும்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.”என குறிப்பிட்டார்.