பொன்சேகா மீதான கொலை முயற்சி.. முன்னாள் போராளிகள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் மூன்று முன்னாள் போராளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மூவருக்கும் எதிராக 230 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்றையதினம்(28.01.2025) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மொரிஸ் எனப்படும் செல்வராசா கிருபாகரன், சண்முகலிங்கம் சூரிய குமார் மற்றும் தனுஷ் என்ற தம்பையா பிரகாஷ் ஆகிய மூவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சாட்சியங்கள் வழக்கு விசாரணை சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கு விசாரணை, நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரின் மெய்ப் பாதுகாவலர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

குறித்த தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில், செல்வராசா கிருபாகரன், சண்முகலிங்கம் சூரிய குமார் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.