கிழக்கினை மீட்க புறப்பட்டவர்கள் மண் அகழும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் – ஞா.சிறிநேசன்


கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு இன்று மண் அகழும் செயற்பாடும் காணி அபகரிப்பு செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஆரசாங்க அதிகாரிகள் இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் காணி அபகரிப்பகளை தடுத்து நிறுத்தமுடியாதவர்களாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த திங்கட்கிழமை காந்தி சதுக்கத்தில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகளோடு தாய்மார் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மண்முனை- வடக்குப் பிரதேசம் காணித் தட்டுப்பாடு உடைய பகுதியாகும். மக்களுக்குத் தேவையான காணிகளை வழங்குவதிலே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரதேசத்திலிருந்து இங்கிருக்கின்ற அரசியல் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் காணிகளை அபகரிப்பதாக அவர்கள் தமது ஆர்ப்பாடத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்போது கிழக்கை மீட்கின்ற செயற்பாடு எனச் சொல்லிக் கொண்டு மண் அகழ்கின்ற செயற்பாடுகளும், காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகளும் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.

எனவே அரச தரப்பில் இருக்கின்ற நிருவாகிகள் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறார்களா? என்ற கேள்வி எழுகின்றது.

மக்களுக்குச் சேர வேண்டிய காணிகள் தனிப்பட்ட அதிகாரக் குவிப்பில் இருக்கின்றவர்களுக்கு வழங்கப்படுவதென்பது மக்களை ஏமாற்றித் தாங்கள் பலன்களை அடைந்து கொள்கின்ற ஒரு செயற்பாடாகவே உள்ளது.

அன்றைய காலகட்டத்தில் மண் என்பது பாரிய வாகனங்கள் மூலமாக ஏற்றப்பட்டுக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போது புகைவண்டி மூலம் மண்வளம் சூறையாடப்படுகின்றது. இந்நிலையில் கிழக்கை மீட்பதென்பது காணிகளை அபகரித்துக் கொண்டு மண் வியாபாரம் செய்யும் செயற்பாடுதானா? என்று கேட்க வேண்டியிருக்கின்றது.

மாவடி ஓடை, புளுட்டுமான்ஓடை, மண்முனை – வடக்குப் பிரதேசம், கிரான் பிரதேச செயலகம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற காணிகள் அபகரிக்கப்படுவதாக மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மக்களை ஏமாற்றி நீங்கள் செய்த அரசியல் போதும். அதற்குரிய பதில்களை வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் ”என்றார்.