இம்முறை தேர்தல் இலங்கையின் அரசியல், பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்வுகூறல்


சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
 
மிகமுக்கிய தருணத்தில் நடைபெறும் இம்முறை ஜனாதிபதித்தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவ்வமைப்பு எதிர்வுகூறியுள்ளது.  

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது.
 
அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன.
 
அதேபோன்று சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைiயிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு நாளைய தினம் (15) நாட்டை வந்தடையவுள்ளது.
 
அதுமாத்திரமன்றி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் (சார்க்) அங்கத்துவ நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அவர்களது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
 
இவ்வாறானதொரு பின்னணியில் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அதன் தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கடந்த 11 ஆம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கண்காணிப்பாளர்களில் தேர்தல் செயன்முறை ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் உள்ளடங்குகின்றனர்.
 
 
அதன்படி இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, 'பொருளாதார ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், மக்கள் மத்தியிலான அதிருப்தி ஆகியவற்றுக்கு நாடு முகங்கொடுத்திருந்த நிலையில், தீர்மானம் மிக்கதொரு தருணத்தில் இந்த ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிகமுக்கிய பங்காற்றும்' எனத் தெரிவித்துள்ளது.