கனடாவை போலவே இலங்கையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் - எரிக் வோல்ஸ்

கனடாவில் இனவழிப்பு இடம்பெற்றது உண்மையே என இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான இனவழிப்பு இடம்பெற்றதனை ஒப்புக் கொள்வதாகவும் தற்பொழுது நல்லிணக்க முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

கனேடிய தமிழ் காங்கிரசினால் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதேபோன்று இலங்கையிலும் நல்லிணக்கம் முனைப்புக்களை மேற்கொள்வதே பொருத்தமானது.

கனடாவை போலவே இலங்கையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

கனடாவில் இரு மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டு ரீதியாகவும் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

கனடாவில் ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழியும் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது. 

பழங்குடி இன மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கனடா விரும்புகின்றது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கனடா வாழ் இலங்கை தமிழர்கள் எமது நாட்டுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகின்றனர். அதனை பாராட்டுகிறோம். 

மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை சார்ந்தவர்கள் கனடாவில் சேவையாற்றி வருகின்றனர். கனடாவில் தமிழ் பூர்வீகத்தை கொண்ட அமைச்சர்களும் அங்கம் வகிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.