இந்தியா - சீனாவுடனான உறவில் எவ்வித பதற்றமும் இல்லை..! உறுதியளிக்கும் இலங்கை



இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அலி சப்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை, சீன ஆய்வுக் கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சிநிரலிடப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுகின்றது. ஆகையால் எவ்வித குழப்பங்களும் ஏற்படாது என தெரிவித்திருந்தார்.

மேலும், இலங்கைக்குள் போர் மற்றும் ஆய்வுக் கப்பல்கள், விமானங்களின் வருகைகளின் போது வெளிப்படைத் தன்மையை பேணுவதற்காக 'நிலையான செயற்பாட்டு பொறிமுறை' வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அடுத்த வாரம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விஜயம் செய்யவுள்ளதோடு, ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி சீனாவின் 'Shi Yan 6' ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதுடன் இரு நாடுகளும் இலங்கைக்கு நீண்ட கால ஒத்துழைப்புகளை வழங்கி வருவதை அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அண்மையில் இந்தியாவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்திருந்ததுடன், சீனாவிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதிபரின் விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைவாக திருகோணமலையை பொருளாதார அபிவிருத்தி வலயமாக மேம்படுத்துவதற்கு இந்தியாவும் பங்களிக்கவுள்ளது.

எரிபொருள், எரிசக்தி துறைகளிலும் இந்தியா இலங்கையுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இது தொடர்பிலான செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து உயர்மட்ட தரப்பினர் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயங்கள் குழப்பங்களை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

இலங்கை அணிசேரா கொள்கையை பின்பற்றி வருவதுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.