பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு வெளியானது!

உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபையில் இன்று அறிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றில் விஷேட பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேற்படி சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறாகும்:-

• 3, 42, 53 மற்றும் 70 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அவை நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

• 4 ஆம் வாசகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்படுதல் வேண்டும்.

• 72(1) ஆம் வாசகம் அரசியலமைப்புடன் இணங்காததுடன் விசேட பெரும்பான்மையுடனும் மற்றும் மக்கள் ஆணையின் போது மக்களினால் அங்கிகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும். அதற்கு இணங்க, 72(2) ஆம் வாசகமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.

• 75(3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 4 (இ) உறுப்புரையை மீறுவதுடன் 2/3 பெரும்பான்மையுடனும் மக்கள் ஆணையின் போது அவை அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும்.

• 83 (7) ஆம் வாசகம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

மேலும், உயர்நீதிமன்றத்தினால் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் சட்டமாக நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.