நாட்டில் இடம்பெற்றுவரும் கொலை கலாசாரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்று சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? என கேட்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவித்த அவர்,
இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது.
இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
எனவே, இந்த குற்ற அலையை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படாது என்றும், மாறாக குற்றவியல் நடவடிக்கை முறை சட்டம் மேலும் பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலைக் கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுகிறது.
எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?
அனைத்து துறைகளுக்கும் இந்த பாதாள குழுக்களின் நடவடிக்கை தாக்கம் செலுத்தி இருக்கிறது. சிவில் சமூகத்துக்கும் தாக்கம் செலுத்தி இருக்கிறது.
விசேடமாக சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டு வரும் இந்நேரத்தில், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. இந்த வருடம் அதிகளவில் சுற்றுலா துறையினர் நாட்டுக்கு வரும் என நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்.
இடம்பெற்றுவரும் கொலை கலாசாரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்று சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது பொருளாதாரத்துக்கும் பாதிப்பதாக அமையும், எனவே இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.