ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே உயிரிழந்த மாணவி..!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சேக் சஜிதாவிடம் பாடம் தொடர்பான சில கேள்விகளை ஆசிரியர் எழுப்பியுள்ளார்.

அப்போது அதற்கு பதிலளித்து கொண்டு இருந்த சஜிதா திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேக் சஜிதாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த செய்தி அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது.

மாணவியின் உடலை கண்ட அவரது பெற்றோர்கள் கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் வருத்தமடைய செய்தது. இந்த நிலையில் மாணவியின் இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர், வகுப்பு மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாகவே மாரடைப்பு என்பது இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 வயதை கடந்த முதியவர்களுக்கு ஏற்பட்டு வந்தது.

ஆனால் தற்போது உள்ள அதிநவீன மற்றும் வேகமான வாழ்க்கை சூழ்நிலையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.