சிங்கப்பூரிலிருந்து கோட்டாபய சென்ற பிரத்தியேக ஜெட் விமானத்துக்கு பணம் செலுத்திய இலங்கை அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ளார்.

அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார்.இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஆம் என பதில் வழங்கியிருந்தார்.அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன.முன்னாள் ஜனாதிபதியும் அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டுள்ளார் எனவும் அதனால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.