காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற யாழ்தேவிக்கு ஏற்பட்ட நிலை

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மஹவ புகையிரத நிலையத்தில் இருந்து குடிபோதையில் ஏறிய நான்கு பேர் புகையிரதத்தில் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

புகையிரதம் மாலை 4.10 மணியளவில் மஹவ நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தவேளை குடிபோதையில் ஏறிய நான்கு பேரால் புகையிரதத்திற்குள் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக பயணிகள் அவசர காலங்களில் பயன்படுத்தும் சங்கிலியை இழுத்து ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசி சமிக்ஞை கம்பத்திற்கு அருகில் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

பயணிகளால் நிரம்பியிருந்த ரயிலில் ஏறிய குடிகாரர்கள் பயணிகளிடம் இருக்கைகளை கோரியதால் மோதல் ஏற்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர். அத்துடன் பயணிகளுடன் கைகலப்பு ஏற்பட்டதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.

ரயிலில் இருந்து இறங்கிய குடிகாரர்கள் ரயில் பெட்டியை கட்டையால் தாக்கினர். இதனால், ரயில் பெட்டியின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

உடனடியாக செயற்பட்ட புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இக்குழுவினரை கைது செய்து அனுராதபுரம் ரயில்வே உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் ஆர்.எம்.பி.ஏ. ரத்னமலலா மற்றும் பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.