கொழும்பை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாபயணிக்கு ஏற்பட்ட நிலைமை


நியூசிலாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது, ​​கொழும்பு நகரை சுற்றிப்பார்க்க ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட சுற்றுலா வழிகாட்டி ஒருவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நியூசிலாந்து நாட்டவர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

நியூசிலாந்துக்காரர் கொழும்பு நகருக்குச் செல்வதற்காக சுற்றுலா வழிகாட்டியுடன் முச்சக்கரவண்டியின் விலையை வினவ, முச்சக்கரவண்டியின் சாரதி கொழும்பு நகரைச் சுற்றி வர 20 டொலர்கள் தேவைப்படுவதாகக் கூறினார்.

ஒரு டொலர் 4,500 ரூபாய் என்றும், அந்தத் தொகையை ரூபாயாகத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தத் தொகையை நியூசிலாந்துக்காரர் வங்கி அட்டை மூலம் பெற்று அவரிடம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சுற்றுலா வழிகாட்டியால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சுற்றுலா பயணி இது தொடர்பில் காவல்துறையில் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த சுற்றுலா வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.