கல்கிசையை நேற்று உலுக்கிய துப்பாக்கி சூடு : பின்னணியில் இருந்த தாய், இதற்கு முன்னர் 8 பேர் கொலை


இலங்கையை நேற்று உலுக்கியிருந்த, கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கல்கிசை கடற்கரை வீதியில் நேற்று காலை மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தெஹிவளையைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், 09 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்.

 
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் தாய் முன்னெடுத்துவந்த போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயற்படும் மற்றுமொரு போதப்பொருள் கும்பலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

படோவிட்ட பகுதியை மையமாகக் கொண்ட இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளது.

இறந்த இளைஞர் ரிஸ்மி, படோவிட்ட கோஸ் என்பவரின் மூத்த சகோதரியின் கணவரின் மைத்துனியின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்து குறித்த இளைஞர் மீது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன என்றும் மேலும் நீதிமன்ற விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாக இருந்தாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதல் படோவிட்ட கோஸ் மல்லிக்கும், துபாயில் வசிக்கும் படோவிட்ட அசங்க என்ற நபருக்கும் இடையிலான போதைப்பொருள் தொடர்பான மோதலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மோதலின் விளைவாக இரு தரப்பினரின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


முந்தைய கொலைகள் இந்த பாதாள உலகக் கும்பல் மோதலின் விளைவாக இடம்பெற்றுள்ளதாகவும் இதுவரை எட்டு கொலைகள் நடந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதன்படி,

செப்டம்பர் 16, 2024 - படோவிட்டாவில் தரிடு சுவாரிஸ் கொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18 - படோவிட்டாவில் உள்ள அசங்க பிரிவின் ஆனந்தாவின் கொலை இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 20 - தெஹிவளை நகராட்சி மன்றத்தில் ஒரு சிறு ஊழியராக பணியாற்றி அநுர கோஸ்டா தெஹிவளையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 

நவம்பர் 13 - கயாஷன் சதுரங்கவின் கொலை இடம்பெற்றது.

2025 ஜனவரி 7 - கல்கிஸ்ஸ, வதாரப்பல வீதியில் இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 19 - கல்கிஸ்ஸ, சிறிபால மாவத்தையில் வசிக்கும் "சுது" என்ற 23 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

இதேநேரம் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் நடந்த ஒரு கொலையுடன் நேற்று ரிஸ்மி என்ற 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த தொடர் கொலைகள் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

பட்டப்பகலில் இதுபோன்ற கொலைகள் தேசிய பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளன.
 
பழிவாங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த கொலைகளை மேலும் வலுவடையக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.