தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் பதவி விலகல் புதினம்!! நடந்தது என்ன

இலங்கைத் தமிழரசுக்கட்சி வாலிபர் அணித்தலைவர் கடந்த வாரம் தமிழரசு கட்சிப்பணிகளில் இருந்து திடீரென்று விலகியதாகச் செய்திவந்ததும், பின்னர் தான் அப்படி விலகவில்லை என்று அறிக்கைவிட்டததும் ஏன் என்ற கேள்வி கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது.

என்ன நடந்தது? எதற்காக தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணித் தலைவரின் பதவி விலகல் செய்தி வெளியானது? பின்னர் அதனை ஏன் இன்று அவர் மறுத்தார்? அவர் கூறியது உண்மையா அல்லது பொய்யா? என்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் கேட்டோம்.

அவர் கூறிய பதிலை அப்படியே இங்கு தருகின்றோம்:

கடந்த 4 ம் திகதி மட்டக்களப்பு சென்றிருந்த கட்சியின் தலைவரும், கட்சியின் முந்திரிக்கொட்டையும், களுவாஞ்சிகுடியில் உள்ள ஒரு கட்சிப் பிரமுகரின் வீட்டில் வாலிபர் அணித்தலைவருடன் பேச்சுவார்தைகள் நடாத்தினார்களாம்.

‘உமது தந்தையார் மற்றும் உங்கள் குடும்பத்தினர் நீண்ட காலமாக தந்தை செல்வாவுடன் சேர்ந்து கட்சிக்காக உழைத்தவர்கள்… அந்தப் பரம்பரையில் வந்த உம்மை கைவிடமுடியாது..” என்று தலைவர் சமாளிக்க முயன்றிருக்கின்றார்.

அதற்கு மசியாத இளைஞரணித்தலைவர் இவ்வாறு கூறினாராம்:

‘ஏற்கனவே கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கத்திடம் ஒரு நியமனம் கேட்டபோது அவர் மறுத்தார்.

எதிர்கட்சி தலைவராக 2015 இல் சம்மந்தரிடமும் பதவி கேட்டு ஏமாற்றப்பட்டேன்.

2020 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக கி.துரைராசசிங்கத்தை நியமித்தால் அவர் படுதோல்வி அடைவார் எனவே என்னை நியமிக்குமாறு கேட்டேன். எவரும் கணக்கெடுக்கவில்லை. என்னை நியமித்திருந்தால் சாணக்கியனைவிட அதிகூடிய வாக்குகளை பெற்றிருப்பேன்.

2018 இல் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி எனக்கு வழங்ககூடாது என முன்னாள் பொதுச்செயலாளர் துரைராசசிங்கமும், அப்போது இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டுமென்று என்னை ஓரம் கட்டினார்கள்.

இவ்வாறு தொடர்ந்து கட்சியால் வஞ்சிக்கப்பட்டே வருகின்றேன்.

அதனால்தான் நான் சித்தாண்டி கூட்டத்தில் வைத்து பதவி விலகல் கடிதம் கொடுத்து தலைவர் மாவை அண்ணருக்கு அனுப்பினேன்’ என்று கொட்டித்தீர்த்திருந்தாராம்.

அத்தோடு தான் தொடர்ந்து கட்சியில் நீடிப்பதாக இருந்தால் இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று கூறி அந்த நிபந்தனைகளை முன்வைத்தாராம்.

நிபந்தனைகளைக் கேட்ட தலைவர்களுக்கு தலை சுற்றியதாம்.

அவர் முன்வைத்த நிபந்தனைகள் இவைதானாம்:

கலையரசனின் தேசிய பட்டியல் தனக்கு வழங்கப்படவேண்டும்.

சாணக்கியன் எம்பிஇ அல்லது கலையரசன் எம்பி யின் பணியாளர்(Staff) குழுவில் ஒரு நியமனம் தரப்படவேண்டும்.

நான் மீண்டும் கட்சியில் செயல்படுவதாயின் எனது பொருளாதார கஷ்டத்தை கவனத்தில் எடுத்து ஒரு பதவி தந்தால் அல்லது மாத வருமானம் தந்தால் மட்டுமே தொடர்ந்து இயங்குவேன்.

ஏற்கனவே ஒரு மட்டக்களப்பு எம்.பி. எனக்கு மாதம் ஒரு தொகைபணம் தந்தவர். பின்னர் யாழ் எம்பி ஒருவரும் மாதாமாதம் எனக்கு பண உதவிகளை்செய்துவந்தவர். திடீரென இருவரும் இப்போது அதைநிறுத்திவிட்டார்கள். அதுதான் பதவி விலக காரணம் எனவும் அவர் கூறியுள்ளாராம்.

“யோசிப்பம் தம்பி..” என்ற வளமையான பல்லவியுடன் விடைகொடுத்து அனுப்பினாராம் தலைவர்.

இதுதான் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறிய தகவல்.

'பேந்து ஏன் அந்த தம்பி அடித்துப்பிடித்துக்கொண்டு 'நான் விலகவில்லை.. அது பொய்ச் செய்தி.." என்று பேட்டியெல்லாம் கொடுத்துவருகின்றார்?' என்று கேட்டோம்.

ஏதோ ''டீல்' ஒன்று சரிவந்திட்டு போல..' என்று ரகசியமாகக் கூறினார்.