இலங்கை தொடர்பில் ஐ.நாவில் இணை அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை!


இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியது முக்கியமானது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அத்துடன் சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேசக் கட்டமைப்புடன் இணங்கும் வகையில் சட்டத்தை கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும் குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனடா, மலாவி, மொண்டினீகுரோ, வடக்கு மசிடோனியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை இணை அனுசரணை நாடுகள் குழு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்த தமது நிலைப்பாட்டை அறிக்கையிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி சைமன் மேன்லி (Simon Manley) இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அனைத்து மத மற்றும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சிறிலங்காவின் உறுதிமொழிகளை வரவேற்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைதியான போராட்டங்கள் மீதான கடுமையான எதிர்வினைகள் குறித்த கவலைகளையும் குறித்த நாடுகள் வெளியிட்டுள்ளன. அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் ஒன்றுபடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமைகளின் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் குடிசார் சமூகம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது எனவும், எதிர்கால சட்டம் உட்பட, குடிசார் சமூகத்தின் முக்கியமான பணிக்கான இடத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை தாங்கள் சுட்டிக்காட்டுவதாகவும் கூறியுள்ளன.

அத்துடன் இலங்கையர்களின் நம்பிக்கையைப் பேணுவதில் தேர்தல் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன. நீண்ட காலமாக இருந்து வரும் ஊழலுக்கு தீர்வு காணுமாறு சிறிலங்கா அதிகாரிகளை இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சிறிலங்கா அரசாங்கம் செப்டெம்பர் மாதம் சபைக்கு வழங்கிய உறுதிமொழிகளை சுட்டிக்காட்டியதுடன், அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற இலக்குடன், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிலைமாறுகால நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.