அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.
நேற்று இக்கூட்டத்தொடரின் அமர்வில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினார்.
எமது நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின் ஊடாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஊடாக எம்மைத் தெரிவு செய்தனர்.
அதனையடுத்து இலங்கை வரலாற்றிலேயே எம்மால் கட்டமைக்கப்பட்ட பாராளுமன்றமே மலையகத்தைச்சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக அதிகளவு பெண் பிரதிநிதிகளையும், மாற்றுத்திறனாளி ஒருவரையும் உள்ளடக்கிய சகல தரப்பினருக்குமான பிரதிநிதித்துவத்துடன்கூடிய பாராளுமன்றமாகத் திகழ்கிறது.
தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதுடன், அதனை சகலருக்குமான சமபங்கீட்டை உறுதிப்படுத்தக்கூடிய பொருளாதாரமாக நிலைமாற்றமடையச்செய்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.
அதேபோன்று எமது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியிருக்கிறோம்.
அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், வீடமைப்பு மற்றும் நட்டஈடு வழங்கல் ஆகியவற்றுக்கு அவசியமான நிதியொதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை நாம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தின் ஊடாக நேர்மைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சி நிர்வாக முறைமையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு உத்தேசித்துள்ளோம்.