அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்கும் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இன்று அரசியல் மேடைகளில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கும் குழுவினரிடம் நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டமும் இல்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தல்களின் போது நபர்களை பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்காக சமர்பிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அதற்கு மாறாக நாட்டின் முன்னேற்றுத்துக்கான வேறு திட்டங்களை வைத்துள்ளவர்கள் அதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஒரு ஆசனத்தை வென்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக பதவியேற்றதில்லை. ஆனால் இலங்கையில் அது நடந்தது.
நாட்டின் அரசியல் வங்குரோத்து நிலையே அதற்கு காரணமாகும். நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க எவரும் முன்வரவில்லை. அதனால் நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.
இன்று அரசியல் வாதிகள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை.
அதனால் அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு மாறான வேறு முறைமகள் இருக்குமாயின் அதனை அவர்கள் கூற வேண்டும். எவரும் அவ்வாறான திட்டத்தை முன்வைத்திருப்பதாக தெரியவில்லை.
இந்தத் தேர்தலில் தீர்மானிக்கப்படுவது எனது வெற்றி தோல்வி அல்ல. நாடு தோற்கடிக்கப்படுமா? இல்லையா? என்பதே தீர்மானிக்கப்படும். தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
அதை நடைமுறைப்படுத்தவே பொருளாதார மாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது சரிந்தால் மீண்டும் அந்நியச் செலாவணியை நாம் இழக்க நேரிடும். மீண்டும் மருந்து, பெட்ரோல், எரிபொருள் இல்லாமல் வரிசையில் நிற்க வேண்டியேற்படும். எனவே, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
அனைத்து கட்சி தலைவர்களும் இந்த பொருளாதார மாற்ற சட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு இல்லையெனில், ஒரு மாற்றுவழியை முன்வைக்கவும். இத்தேர்தலில் தனி நபரை அன்றி, பொறிமுறையையே தெரிவு செய்ய வேண்டும். இந்த முறை தொடர வேண்டும் என்பதில் நீங்கள் திருப்தி அடைந்தால், இந்த முறையுடன் முன்னோக்கிச் செல்லலாம்.
அவ்வாறின்றி மீண்டும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், அந்நியச் செலாவணி இல்லாத, மருந்து, உரம் இல்லாத நாடு வேண்டுமானால் இன்னொரு தரப்பினரைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஒரு நாடாக முன்னோக்கி செல்ல விரும்பினால், நீங்கள் அரசாங்க வேலைத் திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லலாம் என்று தெரிவித்தார்.