மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது என்கிறார் ஜனாதிபதி

நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

நேற்று (20) பிற்பகல் பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்த ஜனாதிபதி ,
 
கடந்த கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது தப்பித்து ஓடாமல் அதனை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்திற்கு  தனது வாழ்த்துகளை  தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தது. நாட்டில் அந்நியச் செலாவணி இல்லை. தேவையான மருந்துகள், எரிபொருள் கொண்டு வர பணம் இல்லை. கிடைக்கும் பணத்தை எரிபொருளுக்கு வழங்குவதா அல்லது உரத்திற்கு வழங்குவதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் நாம் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை ஆரம்பித்தோம்.

அதன் ஊடாக உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு மருந்து மற்றும் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அத்தகைய கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்து வந்தோம். இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தால், இந்தியாவிலிருந்து மருந்துகளைப் பெற முடிந்தது. மேலும், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட பணத்தால், உணவுப் பொருட்களைப் பெற முடிந்தது.

எவ்வாறாயினும், ஒரு நாடாக நாம் முதல் 6 மாதங்களை மிகவும் சிரமத்துடன் கடந்தோம். அதன் பிறகு நாடு படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மக்கள் உங்களிடம் வந்து பணம் இல்லாமல் மருந்துகளைக் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்களுக்கு மருந்துகளை கொடுக்காமல் சாகச் சொல்வதா, நட்டத்தை அனுபவித்து மருந்து கொடுப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டியேற்பட்டது.

நாம் அனைவரும் அந்தக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. நாம் அனைவரும் சிரமப்பட்டு அந்த முடிவுகளை எடுத்ததால்தான் நாம் ஒரு நாடாக முன்னோக்கி வருகிறோம். 
மேலும் VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவுகளால் நாட்டின் வருமான மூலங்கள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் பெறுமதி வலுப்பெற்று, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடிந்தது.

கடந்த வாரம், IMF பணிப்பாளர்கள் குழுவின் இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களை நடத்தினோம். இலங்கையை வழிநடத்தும் திட்டம் சரியானது என்று அதன்போது சான்று கிடைத்துள்ளது. அதன்படி கடனைச் செலுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பணியை நிறைவுசெய்வது குறித்து தற்போது சீனாவுடன் கலந்துரையாடி வருகிறோம்.

மேலும், பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்கிய தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டை எட்டவும் எதிர்பார்க்கிறோம். 

இதன் மூலம் நாடு விழுந்த பாதாளத்தில் இருந்து இப்போது மீண்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் பயணம் முடிவதில்லை. ஆனால் ஒரு நாடாக நாம் ஏன் படுகுழியில் விழுந்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்  என்று ஜனாதிபதி தெரிவித்தார்.