ஜப்பானிய பேரரசரை சந்தித்த பின் நாடு திரும்பினார் ஜனாதிபதி



ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அந்நாட்டு பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.

டோக்கியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை, பேரரசர்வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜப்பானுக்கான விஜயத்துக்கு முன்னர், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியுடன் பயணித்திருந்தனர்.

இந்தக் குழுவினர் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.