இன்று காலை பதிவான மின்சார துண்டிப்பு நாசவேலையாக இருக்கலாம்! பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தொழிற்சங்கங்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் அல்லது பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபடுவதற்கு சுதந்திரம் உள்ளது.

அத்துடன் தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கும் பொறுப்பை, இலங்கை மின்சாரசபை கொண்டுள்ளது.

 இந்தநிலையில் நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட சில மின்சார உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் சில சிறிய மற்றும் பெரிய நீர் மின்சார உற்பத்தி நிலையங்களான லக்சபான, கனியன், விமலசுரேந்திர மற்றும் பொல்பிட்டிய ஆகியவற்றின் மின்சாரத்தை தேசிய கட்டத்துடன் இணைக்கப்படவில்லை.

எனவே நிலைமை சீராகும் வரை மின்சார பயன்பாட்டாளர்கள் அமைதியை கடைப்பிடிக்கவேண்டும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கேட்டுள்ளார்.