சுட்டுகொல்லப்பட்ட அரசியல்வாதி.. : மஹர சிறைக்குள் இருந்து திட்டம் தீட்டப்பட்டதாக விசாணையில் அம்பலம்


அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை கொலை செய்வதற்கான திட்டம், தற்போது மஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவர் லலித் கன்னங்கரவின் இரண்டு கூட்டாளிகளால் தீட்டப்பட்டது என்பது பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலகத் தலைவர் லலித் கன்னங்கரவின் இரண்டு கூட்டாளிகள் எனக் கூறப்படும் ஆர்மி சம்பத் மற்றும் பொலன்னறுவை சுத்த ஆகிய இரண்டு குற்றவாளிகள், மஹர சிறைச்சாலையில் இருந்து இந்தக் கொலைத் திட்டத்தைத் திட்டமிட்டுள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட “க்ளாக் 19” ரக துப்பாக்கி , ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தானியங்கி ஆயுதம் என்பதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை சுட்டுக் கொன்ற கொலையாளியும், காரை ஓட்டிச் சென்ற நபரும், லலித் கன்னங்கரவிடமிருந்து இந்தத் தாக்குதலுக்கான உத்தரவு கிடைக்கும் வரை, மஹரகமவின் பமுனுவ பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 4 நாட்கள் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்காக வாடகைக் கொலையாளியை வெள்ளை காரில் அழைத்துச் சென்ற ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிறகு, தாக்குதலுக்கு முன்பணமாக இருபதாயிரம் ரூபாய் பெற்றதாகக் வாக்குவலம் வழங்கியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு லலித் கன்னங்கர அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்ததாகவும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லலித் கன்னங்கரவின் பெயரைப் பயன்படுத்தி தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து கொலை செய்யப்பட்ட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  பணம் பெற்றதாகவும், இதுவே இந்த சம்பவத்திற்கு வழிவகுத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.