கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைக்குண்டு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தலவாக்கலையைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்திய இரண்டு சந்தேகநபர்களை ஒருகொடவத்த பகுதியில் வைத்து க்ரேண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக அவர்கள் சில ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்ததகவலின் அடிப்படையில், கொழும்பு - 15 முகத்துவாரம், காக்கைத்தீவு பகுதிக்கு சந்தேகநபர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டதுடன், அங்கு கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சந்தேகநபர்கள் இருவரும் குறித்த பகுதியில் வைத்து பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரி ஒருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் காட்டிய இடத்தில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வருகைத் தந்துள்ளதுடன், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.