வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை!

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்பின்றி அனாதரவான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில் வாய்ப்பை இலகுவாக தேடிக்கொள்ளக் கூடிய வெளிநாடு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்று எண்ணும் இளைஞர், யுவதிகள் அந்நாட்டை நோக்கி செல்கின்றனர்.

இப்படி சென்ற பலர் பல மாதங்களாக தொழில் வாய்ப்பு கிடைக்காது பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி, டுபாய், சார்ஜா, ரஸல் ஐ கைமா,  அஜ்மான், புஜேரா உள்ளிட்ட பல நகரங்களுக்கு தொழில் தேடிச் சென்றவர்கள், தொழிலை தேடிக்கொள்ள முடியாது பரிதாபத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் சுமார் 4 லட்சம் ரூபா பணத்தை அறிவிட்டு, சுற்றுலா விசாவில் இளைஞர், யுவதிகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பல இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும் தொழில் கிடைக்காது இந்த இளைஞர், யுவதிகள் பட்டினியில் பாலைவனங்களில் நடந்து திரிகின்றனர்.

பொய் விளம்பரங்களால் ஏமாறும் இளைஞர்கள் யுவதிகள்

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை!

பல போலி நிறுவனங்கள் அரசின் சிறப்பான நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் திர்ஹாம்களை ( 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபா) சம்பளம் பெறக் கூடிய தொழில்கள் இருப்பதாக கூறி இளைஞர்,யுவதிகளை ஏமாற்றி பணத்தை அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வெப்ப நிலையானது தற்போது 50 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கின்றது. இலங்கையில் இருந்து தொழில் வாய்ப்பு தேடிச் சென்ற இளைஞர், யுவதிகள் கடும் வெயிலில் தொழில் தேடி வருவதுடன் அன்றாடம் வாழ்க்கையை கொண்டு நடத்த பணத்தை பெற்றுக்கொள்ள பிச்சை எடுக்கும் காட்சிகள் பரவலாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.