விண்ணதிரும் கோஷங்களுடன் மட்டு நகரில் ஒன்றாய் சங்கமித்த வட - கிழக்கு மக்கள்!


தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபு வழித் தாயகம் ஆகிய விடயங்களை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரணியானது யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பை வந்தடைந்துள்ளது.

மட்டக்களப்பு தமிழ் உறவுகள் அளித்த அமோக வரவேற்பு மற்றும் ஆதரவுடன், வடக்கு மக்களும், கிழக்கு மக்களும் ஒன்றாய் சங்கமித்து பேரணியாக தற்போது மட்டக்களப்பு நகரப் பகுதியை அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், இலங்கையின் சுதந்திர தினம் - தமிழர்களின் கருப்பு நாள் என பெப்ரவரி 4 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி இறுதி நாளான இன்றைய தினம் (7) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வெற்றிகரமாக நிறைவடையவுள்ளது. 

"வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம், இராணுவமே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும்" எனும் கோஷங்களுடன் தமது உணர்வுகளை வடக்கு, கிழக்கு மக்கள் ஒன்றாய் இணைந்து வெளிப்படுத்தி மட்டக்களப்பு நகரை அதிரவைத்தனர்.