கொழும்பை உலுக்கிய கொலை - தமிழ் தொழிலதிபருக்கு நடந்தது என்ன..! குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

தமது உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, உண்மைகளை வெளிக்கொணர மதிப்பளிக்க வேண்டும் என மறைந்த ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தினர் ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினேஷ் ஷாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் குடும்பத்தவர்களும் இந்த திடீர் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டர், குடும்பத்தில் சிறந்த ஒருவர் எனவும் குடும்பத்தின் இதயம் போன்றவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அவர் வியாபாரம் விளையாட்டு துறைக்காக பாரிய பங்களிப்பை செய்துள்ளதாகவும், குடும்பத்தினர் - நண்பர்கள் உள்ளிட்ட பலராலும் அடுத்துவரும் பல தலைமுறையினருக்கு அவர் நினைவு கூறப்படுவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பிரபல தமிழ் தொழிலதிபரும், ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளருமான தினேஷ் ஷாப்டரின் கழுத்து நெரிக்கப்பட்டமையே, அவரது மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பொரள்ளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

பொரள்ளை மயானத்திற்குள் தினேஷ் ஷாப்டர், தனது காரில் தனியாகவே வருகை தந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்டு, மிகவும் சூட்சமமாக இந்தக் கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சந்தேகநபரான முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுற்கு எதிரான தடை உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று வழங்கியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், இந்த இரண்டு கடவுச்சீட்டுகளுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.

தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கக் கருவியின் அழைப்பு தொடர்பான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு அறிக்கையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிடுமாறு பொரளை காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கு சேவை வழங்குநர்களிடமிருந்து பதிவைப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரிடம் 138 கோடி ரூபாவை பிரையன் தோமஸ் கடனாக பெற்றதாகவும், அதனை மீண்டும் கொடுக்காமையினால் அவருக்கு எதிரான 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடனை திருப்பிச் செலுத்த மறுத்த நிலையில் அடியாட்களை வைத்து இந்தக் கொலையை செய்ததாக பிரையன் தோமஸுற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.