இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமையானது முற்றிலும் தவறானதாகும். குறித்த தீர்மானம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதென்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்
குறிப்பாக இஸ்ரேலுக்கும் இலவச விசாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எந்த அடிப்படையில் இஸ்ரேலுக்கும் இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டது. இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலைக்கு எதிராக பலம் மிக்க நாடுகள் கூட குரல் கொடுத்து வருகின்றன.
இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளுக்கிடையில் பிளவும் காணப்படுகிறது. ஆசிய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளன.
அண்மைய நாட்களாக ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றன. இஸ்ரேல் படுகொலையில் ஈடுபடுகின்றது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இலங்கைக்கு இதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டதற்கும் பலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்குமான வரலாறு காணப்படுகிறது.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி வரை பலஸ்தீனுக்கு ஆதரவான பலஸ்தீன் சுதந்திரத்திற்கு ஆதரவான வெளிநாட்டு கொள்கைகளையே இலங்கை அரசாங்கம் பின்பற்றி வருகிறது.
பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் சிக்கியிருந்து விடுதலைக்காக போராடிய மூன்றாம் உலக நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் பலஸ்தீனின் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்துள்ளது.
ஆனால் தம்மை முற்போக்கு வாதிகள் எனக் கூறிக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் வெளிநாட்டு கொள்கையை பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பலஸ்தீனுக்காக குரல் கொடுத்த பாரிய அரசியல் சக்தியாக இவர்கள் காணப்பட்டனர்.
பாலஸ்தீன் சுதந்திரத்துக்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு இருக்கின்றனர்.
தேர்தலுக்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் பலஸ்தீன் தூதரகத்துக்குச் சென்று ஜனாதிபதி அநுரகுமார் திஸாநாயக்க, அவர்களின் சுதந்திரத்திற்காக ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகளால் பலஸ்தீனுக்கு உணவு செல்வது கூட தடுத்து வைக்க தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் பலஸ்தீனில் மந்த போசணை அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் யுத்த குற்றம் புரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறான பின்னணிக்கு மத்தியிலும் இஸ்ரேலுக்கு இலவச விசாவை வழங்குவதற்கு வெட்கமின்றி இந்த அரசாங்கம் எந்த அடிப்படையில் தீர்மானித்தது? இது எவ்வாறான வெளிநாட்டு கொள்கை? இது எவ்வாறு அணிசேரா கொள்கையாகும்?
யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டோருக்கும் இந்நாட்டுக்கு வருவதற்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை அரசாங்கமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகிறது.
எந்தவொரு மதிப்பீடும் இன்றி அரசாங்கம் இவ்வாறானதொரு பாரதூரமான தீர்மானத்தை எடுத்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு அநுரகுமாரவின் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.