மனித உரிமைகளை மதித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

தவறான நிர்வாகம் மனித உரிமை மீறல்களின் பின்னர் இலங்கை அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமை என்பன நெருக்கடியில் சிக்குண்டுள்ளதாகவும் குறித்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கருத்துசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை மதிக்கவேண்டும் என்றும் ஆயுதப்படையினரின் துஸ்பிரயோகத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்றும் அது தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகளை பின்பற்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, நெருக்கடிகளுக்கு தீர்வை கண்டால் மாத்திரமே சர்வதேச உதவிகள் பயனுள்ளவையாக காணப்படும் எனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.