சர்வதேச சந்தைகளை அடிப்படையாகக் கொண்டு சம்பளமும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறது அரசாங்கம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அரசாங்கத்தினால் தீர்மானிக்க முடியாது என்ற போதிலும், இவ்விடயத்தில் நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தின் தலையீடு நிச்சயம் காணப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்ற போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட மாட்டாது. அது முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் இடம்பெறும் விடயமாகும். எவ்வாறிருப்பினும் இவ்விடயத்தில் அரசாங்கம் நிச்சயம் தலையிடும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் உரிய தரப்பினரை வலியுறுத்தும். அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் இவ்விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு நான் தெரிவிக்கின்றேன்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் தரப்பினரே தீர்வினையும் வழங்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களாலேயே நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அத்தோடு சர்வதேச சந்தைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களின் சம்பளமும் தீர்மானிக்கப்பட வேண்டும். உற்பத்தி செலவு அசாதாரணமான வகையில் உயர்வடையுமானால், வெளிநாட்டு சந்தைகளில் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படுமானால் அது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

எனவே இவற்றையும் அடிப்படையாகக் கொண்டே சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.