இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை தமிழ் பெண்!




இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு, இம்முறை திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்க வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
 
குறித்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் முதல் முறையாக இவருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள நளினி,
 
“இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள்.
 
அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் காணப்படுகின்றனர்.
 
 எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்" என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.