சமூகவலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில் சிறுவனை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மூட்டை அரிசிமலை பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட நபரும் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான நான்கரை வயதுடைய சிறுவன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிறுவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பல சமூக ஊடக பயனர்கள் பொலிஸாரை வலியுறுத்திய நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றது.
இந்த நபர் சிறுவனை கொடூரமாக தாக்குவதை அயல் வீட்டவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அதற்கமைய, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்காக அவரது வீட்டை சுற்றிவளைத்தனர்.
எனினும் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவான நிலையில், இக் கைது நடவடிக்கை இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.